உத்திரமா? துரும்பா? கிறிஸ்துவ செய்தி • Matthew 7: 3-5 Explain


உத்திரம் என்றால் பெரிய மரக்கட்டை. துரும்பு என்றால் சிறிய துகள்.

நம் கண்ணில் இருக்கும் மிகப்பெரிய மரக்கட்டையை உணராமல், மற்றவர்களின் கண்ணில் இருக்கும் சிறிய துரும்பைப் பெரிதுபடுத்திப் பார்ப்பது எவ்வளவு பெரிய முரண்பாடு!

தன்னிடம் மிகப்பெரிய தவறுகள் இருக்கின்றன என்ற உணர்வே இல்லாமல், மற்றவர்களின் சிறிய தவறுகளைக்கூடப் பெரிதுபடுத்திப் பேசுபவர்களை என்னவென்று சொல்வது?

மற்றவர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டுவதோடு மட்டுமல்லாமல், அவர்களைக் குற்றப்படுத்திப் பேசுவதிலும் சிலர் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஆனால், தங்களுடைய தவறுகளை உணர்ந்து திருத்திக்கொள்ள மட்டும் மனம் வருவதில்லை.

இப்படிப்பட்டவர்களைக் குறித்துத்தான் இயேசு கிறிஸ்து, “மாயக்காரனே!” என்று கடுமையாக எச்சரிக்கிறார்.

மற்றவர்களின் தவறுகளைப் பார்ப்பதற்கு முன்பாக, நம்முடைய தவறுகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதே இயேசு கற்பிக்கும் பாடம்.

“தன் முதுகு தனக்குத் தெரியாது” என்பார்கள். அதுபோல, மற்றவர்களுடைய குறைகளை எளிதாகக் கண்டுபிடிப்பவர்கள், தங்களுடைய குறைகளை உணரத் தவறிவிடுகிறார்கள்.

மேலும், ஒருவரை நோக்கி ஆள்காட்டி விரலை நீட்டிக் குற்றம் சாட்டும்போது, நம்முடைய மற்ற மூன்று விரல்கள் நம்மையே நோக்கி நீட்டப்பட்டிருக்கின்றன என்பதை மறந்துவிடுகிறோம்.

அன்பானவர்களே!

மற்றவர்களைக் குற்றப்படுத்துவதற்கு முன்பாக, ஒருமுறை நம்முடைய இருதயத்தை ஆராய்ந்து பார்ப்போம்.

- நான் மற்றவர்களிடம் குற்றம் காண்பதைப்போல, என்னுடைய குறைகளையும் உணர்கிறேனா?
- மற்றவர்களைத் திருத்துவதற்கு முன்பாக என்னைத் திருத்திக்கொள்கிறேனா?
- அன்போடும் மனத்தாழ்மையோடும் மற்றவர்களுடைய தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறேனா?

மற்றவர்களின் குறைகளைப் பெரிதுபடுத்துவதில் அல்ல, நம்முடைய குறைகளை உணர்ந்து திருத்திக்கொள்வதில்தான் உண்மையான ஆவிக்குரிய வளர்ச்சி இருக்கிறது.

மற்றவர்களின் குறைகளைத் தேடுவதற்கு முன்பாக, நம்முடைய குறைகளைத் திருத்திக்கொள்வோம்!
இயேசுவின் வார்த்தைகளை நினைவில் கொள்வோம்!

“நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?”
“மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.”
— மத்தேயு 7:3–5

Post a Comment

0 Comments