நட்புத் தோட்டத்தைப் பேணுவது எப்படி? Friendship Day Tamil Article

நட்புத் தோட்டத்தைப் பேணுவது எப்படி?

புனிதமான பிணைப்பான நம்பிக்கையான நட்பு என்பது தானாக முளைப்பதல்ல. கிரேக்க மொழியில் நட்புக்குப் பயன்படுத்தப்படும் 'பிலியா' (philia) என்பது அறிவார்ந்த, தூய்மையான, நம்பிக்கையான நட்பைக் குறிக்கிறது. (கிரேக்கத்தில் Eros - காதல், Storge - குடும்ப அன்பு, Philia - இரத்த உறவுகள் இல்லாத நட்பு & சகோதரத்துவம், Agape - தெய்வீக/நிபந்தனையற்ற அன்பு). இயேசு இலாசரு மீது வைத்திருந்த நட்பை குறிக்க Philia என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது (யோவான் 11:3&36). அகப்பே வார்த்தைக்கு அடுத்து, அன்பைக் குறிக்க இந்த வார்த்தை தான் புதிய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள்து. 

எபிரேயர் 13:1: "சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது." 

இன்றைக்கு எல்லா நட்புகளும் நம்பிக்கையான நிலையான நட்பாக இருப்பதில்லை. இந்தச் சூழலில், நம்பிக்கையான நட்பை வளர்ப்பது எப்படி? நட்பு என்னும் தோட்டத்தில் நண்பர் என்ற மரத்தை வளர்ப்பது எப்படி?

1. வேரூன்றட்டும் - No Ego
உளவியல் ரீதியாக, 'சுயம்' என்பது தவறான ஒன்றல்ல; அது மனித இயல்பின் ஒரு பகுதிதான். ஆனால், அந்த சுயம் அதிகமாகும்போது, தானாகவே எதிர்மறை எண்ணங்களை விதைத்துவிடுகிறது. அளவுக்கு அதிகமான "தான் தான் சரி" என்ற எண்ணமும், நட்பில் விட்டுக்கொடுக்காத பிடிவாதமும், "தான் தான் பெரியவன்" என்ற ஆணவமும் நட்புக்கான உறவை உருவாக்காது.

எபேசியர் 3:17: "நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி..." 

'நான்' என்ற அகந்தை இருக்கும் மனதில், நட்பு என்னும் மரத்திற்கான அன்பு வேரூன்ற முடியாது. தவறுகளை ஒப்புக்கொள்ளும் பக்குவமும், மன்னிப்பு கேட்கும் மனப்பக்குவமும் நட்பின் வேரை ஆழமாக்கும்.ஒரு மரம் உறுதியாக வளர ஆழமான வேர் தேவை என்பது போல், சுயநலமில்லாத அன்பு வேண்டும்.

2. நீர்ப்பாய்ச்சுங்கள் - No Ease
நட்பு என்னும் மரம் எளிதாகவும் தானாகவும் வளர்வதில்லை. நட்பை நாம் சாதாரணமாகவோ அல்லது அலட்சியமாகவோ எடுத்துக்கொள்ளக் கூடாது. "நண்பன்தானே, பார்த்துக்கொள்ளலாம்" "அவன் எங்கே போகப்போகிறான்" என்ற அசட்டுத் துணிச்சலில் (take it for granted) நண்பர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தராமல் இருப்பது நட்பில் விரிசலை ஏற்படுத்தும். 

ரோமர் 12:10: " சகோதரசிநேகத்திலே (philia) ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்." 

மரம் தானாக வளரும் என்று அசால்ட்டாக (Ease / Take it for granted) இருக்காமல், தினமும் அதற்கு முயற்சி என்ற நீரைப் பாய்ச்ச வேண்டும்.
ஒரு நல்ல நட்பை உருவாக்குவதற்கும், அதைத் தக்கவைப்பதற்கும் நேரமும் (Time), முயற்சியும் (Communication) தேவை. 

3. தகுந்த உரமிடுங்கள் - No Envy
நட்புக்குள் பொறாமை நுழைந்துவிட்டால் அது நட்பை உருக்கி அழித்துவிடும். பொறாமை (Envy) என்பது மரத்தை அரிக்கும் அசுரக் களை. நல்ல போட்டி இருக்கலாம்; அது பொறுமையாக மாறிவிடக் கூடாது.

2 பேதுரு 1:7: " .... சகோதரசிநேகத்தோடே (philia) அன்பையும் (agape) கூட்டி வழங்குங்கள்."  

அன்புக்கு எதிரியான பொறாமையை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க வேண்டும். நண்பன் உயரும்போது பொறாமை இல்லாமல் மனதாரப் பாராட்டுவதும், அவன் வீழும்போது தாங்கிப் பிடிக்கும் தூணாக மாறுவதும் தான் நட்பிற்கு நாம் இடும் சிறந்த உரம்.

4. களைகளை களைவோம் - No Echo 
நட்புக்குள் ஒருவரைப் போலவே இன்னொருவர் இருக்க வேண்டும்; செயல்பட வேண்டும் என நினைப்பது தவறானது. மேலும், நண்பன் தவறு செய்யும் போது அதை சுட்டிக்காட்டாமல், அவன் சொல்வதற்கெல்லாம் 'ஆமாம் சாமி' போடுவதும் சரியான அனுமுறையல்ல.

1 பேதுரு 1:22: "நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி.... (Philia) 

நட்பில் மாய்மாலமான தன்மை கூடாது. நாம் நாமாக, அதாவது தனித்துவமாக (Unique) இருக்க முடிகிறதோ, அங்கு தான் சரியான நட்பு வெளிப்படும். ஒருவருக்கு ஒருவர் தவறை சுட்டிக்காட்டி சரிசெய்துக்கொள்ளுதல் இணைந்து வளர வழிவகுக்கும். 

5. வேலியைப் பேணுங்கள் - No Eros
நட்பு காமத்தின் பிறப்பிடம் அல்ல. தூய நட்பைத் தாண்டிய கவர்ச்சியும், சுயநல எதிர்பார்ப்புகளும் அதன் எல்லையைச் சிதைத்து விடுகின்றன. இந்த எல்லை மீறல்களால் இன்று நட்பின் ஆழம் மறைந்து, உண்மையான அன்பும் அக்கறையும் கூட "வேறு ஏதோ ஒரு நோக்கம் கொண்டதோ" எனத் தவறாகச் சித்தரிக்கப்படும் அவலநிலை ஏற்படுகிறது. நட்பிற்குள் 'காமம் அல்லது எல்லையற்ற கவர்ச்சி' நுழைந்துவிடாமல் தடுக்கும் வேலிதான் இந்த 'No Eros'.

1 பேதுரு 1:22: "நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி (Philia), ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள் (agape). 

மரம் செழித்து வளர வேலி எப்படி முக்கியமோ, அதேபோல ஒரு தூய்மையான நட்பு தடம் மாறிவிடாமல் இருக்க தகுந்த எல்லை வேண்டும். அகப்பே என்னும் தெய்வீக அன்பால் வேலியிட வேண்டும். இந்த அகப்பே அன்பு தான் இயேசு காட்டிய, உச்சக்கட்ட அன்பின் மாதிரி.

வேரூன்றுங்கள் - சுயம் வேண்டாம் - அன்பு வேண்டும்

நீர்ப்பாய்ச்சுங்கள் - அலட்சியம் வேண்டாம் - அக்கறை வேண்டும்

உரமிடுவோம் - பொறாமை வேண்டாம் - உதவுவோம்

களையெடுப்போம் - அடிவருடாமை வேண்டாம் - தனித்தன்மை வேண்டும்

வேலிபோடுவோம் - காமம் வேண்டாம் - பிணைப்பு வேண்டும் 

"இறைவன் என்னும் பேரொளியில்,
நட்பு என்னும் நந்தவனத்தில்,
நன்மரங்களாய் ஓங்கி வளர்ந்து
நற்கனிகள் பல ஈந்திடுவோம்!
நல்ல பசுமையோடு செழிக்கட்டும் 
நம் நட்புத் தோட்டம்!"

"நான் பணியாள் - என் நண்பர் மரம்
நான் மரம் - என் நண்பர் பணியாள்"

இறையாசி
உங்களோடிருப்பதாக...

யே. கோல்டன் ரதிஸ் M.Sc. B.A. B.D.,

Post a Comment

0 Comments