கிறிஸ்துமஸ் நாடகம் தமிழ் Christmas skit in Tamil script கிறிஸ்து பிறப்பு நாடகம்

நாடகத் தலைப்பு: கிறிஸ்து பிறப்பு
கால அளவு: 7 – 10 நிமிடங்கள்

கதாபாத்திரங்கள் (12 முதல் 15 பேர் வரை):
1. கதைசொல்லி (நிகழ்வுகளை விளக்கும் நபர்)
2. மரியாள்
3. கபிரியேல் தூதர்
4. யோசேப்பு
5. பாலன் இயேசு
6. மேய்ப்பர்கள் (2 பேர்)
7. சிமியோன்
8. ஞானிகள் (3 பேர்)
9. ஏரோது அரசன்

--------------------------------------------------
காட்சி 1: மரியாளுக்கு அறிவிப்பு 
--------------------------------------------------
(மேடையில் மரியாள் அமைதியாக அமர்ந்து இறைவேண்டலில் இருக்கிறார். மென்மையான இசை ஒலிக்கிறது.)

கதைசொல்லி: கலிலேயாவில் உள்ள நாசரேத் ஊரில் வாழ்ந்த எளிய பெண் மரியாள். கடவுளின் விருப்பத்திற்குத் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்த அவரிடம், வானதூதர் தோன்றி மாபெரும் செய்தியைச் சொல்கிறார்.

(கபிரியேல் தூதர் மேடைக்குள் வருகிறார். மரியாள் வியப்புடன் பார்க்கிறார்.)

கபிரியேல் தூதர்: வாழ்க, கடவுளின் அருளைப் பெற்றவரே! கடவுள் உம்மோடு இருக்கிறார். பெண்களுக்குள் நீர் ஆசீர்வதிக்கப்பட்டவர்.

மரியாள்: (சற்று தயக்கத்துடன்) இந்த வாழ்த்து எத்தகையதோ என்று என் மனம் கலங்குகிறது. எனக்கு இன்னும் திருமணமாகவில்லையே, இது எவ்வாறு நடக்கும்?

கபிரியேல் தூதர்: மரியாளே, அஞ்ச வேண்டாம். நீர் கடவுளின் அருளைப் பெற்றீர். இதோ, நீர் கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு 'இயேசு' என்று பெயரிடுவீர். அவர் பெரியவராக இருப்பார்; கடவுளின் திட்டம் நிறைவேறும். கடவுளால் முடியாத காரியம் எதுவுமில்லை.

மரியாள்: (கைகூப்பி அமைதியாக) இதோ, நான் கடவுளின் பணிப்பெண்; உம்முடைய சொல்லின்படியே எனக்கு நடக்கட்டும்.

(தூதர் மெதுவாக வெளியே செல்கிறார். காட்சி நிறைவடைகிறது.)

--------------------------------------------------
காட்சி 2: யோசேப்புக்கு அறிவிப்பு 
--------------------------------------------------
(யோசேப்பு சிந்தனையுடன் நடக்கிறார். மரியாள் கருவுற்றிருப்பதை அறிந்த கலக்கமும், அவரை இழிவுபடுத்தக் கூடாது என்ற கருணையும் அவர் முகத்தில் தெரிகிறது. யோசேப்பு ஓரிடத்தில் அமர்ந்து உறங்குகிறார்.)

கதைசொல்லி: நேர்மையான மனிதரான யோசேப்பு, மரியாளை யாருக்கும் தெரியாமல் விலகிவிட எண்ணுகிறார். அப்போது கனவில் கடவுளின் தூதர் அவருக்குத் தோன்றுகிறார்.

(தூதர் யோசேப்பின் அருகில் தோன்றுகிறார்.)

கபிரியேல் தூதர்: தாவீதின் வழிவந்த யோசேப்பே, உன் மனைவி மரியாளை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். அவளில் உருவான குழந்தை கடவுளின் ஆவியால் உண்டானது. அவர் ஒரு மகனைப் பெறுவார்; அவருக்கு இயேசு என்று பெயரிடுவாய். ஏனெனில், அவர் தம் மக்களை அவர்களின் தவறுகளிலிருந்து மீட்டுக் காப்பார்.

(தூதர் மறைகிறார். யோசேப்பு கண்விழித்து, அமைதியும் தெளிவும் பெற்று எழுந்து நிற்கிறார்.)

யோசேப்பு: கடவுளின் விருப்பம் இதுவே என்றால், என் அச்சம் நீங்கியது. மரியாளையும் பிறக்கப்போகும் குழந்தையையும் நான் அன்புடன் காப்பேன்.

--------------------------------------------------
காட்சி 3: இயேசுவின் பிறப்பு 
--------------------------------------------------
(மேடையில் எளிய தொழுவ அமைப்பு. யோசேப்பு மரியாளைக் கவனமாக அழைத்து வருகிறார். மென்மையான கிறிஸ்துமஸ் இசை ஒலிக்கிறது.)

கதைசொல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக பெத்லகேம் சென்ற யோசேப்பும் மரியாளும், தங்கும் விடுதிகளில் இடம் இல்லாததால் ஒரு எளிய மாட்டுத்தொழுவத்தில் தங்கினர். அங்கே உலகின் ஒளியாகக் குழந்தை இயேசு பிறந்தார்.

(மரியாள் குழந்தை இயேசுவைத் துணியில் சுற்றித் தொட்டிலில் கிடத்துகிறார். யோசேப்பு அருகில் நிற்கிறார். மேலே நட்சத்திர விளக்கு ஒளிர்கிறது.)

மரியாள்: (அன்புடன்) எளிய தொழுவத்தில் பிறந்தாலும், என் நெஞ்சில் நிறைந்திருக்கும் ஒளியே!

யோசேப்பு: அரண்மனை இல்லாவிட்டாலும், கடவுளின் அருள் இங்கே நிறைந்திருக்கிறது.

--------------------------------------------------
காட்சி 4: மேய்ப்பர்கள் அறிவிப்பு & வருகை 
--------------------------------------------------
(மேடையின் ஒரு ஓரத்தில் இரண்டு / சில மேய்ப்பர்கள் ஆடுகளைக் கவனிப்பது போல அமர்ந்திருக்கிறார்கள். திடீரென வெளிச்சம் பாய்கிறது; தூதர் தோன்றுகிறார்.)

கதைசொல்லி: இரவில் தங்கள் ஆட்டு மந்தையைக் காத்துக்கொண்டிருந்த எளிய மேய்ப்பர்களுக்கு, வானதூதர் தோன்றி மகிழ்ச்சியான நற்செய்தியை அறிவிக்கிறார்.

கபிரியேல் தூதர்: அஞ்ச வேண்டாம்; இதோ, எல்லா மக்களுக்கும் உண்டாகும் மிகுந்த மகிழ்ச்சியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று தாவீதின் ஊரில் மீட்பராகிய கிறிஸ்து பிறந்திருக்கிறார். துணிகளில் சுற்றப்பட்டுத் தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டிருக்கும் குழந்தையைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்.

மேய்ப்பர் 1: (வியப்புடன்) வாருங்கள்! நாம் உடனே பெத்லகேம் சென்று, கடவுள் நமக்கு அறிவித்த இந்தச் செய்தியைக் காண்போம்.

மேய்ப்பர் 2: எளியவர்களாகிய நம்மைத் தேடி இந்த நற்செய்தி வந்திருக்கிறது!

(மேய்ப்பர்கள் தொழுவத்தை நோக்கி நடந்து வந்து, குழந்தையை வணங்கி மகிழ்கின்றனர்.)

மேய்ப்பர்கள் (சேர்ந்து): பார்த்ததையும் கேட்டதையும் எல்லோரிடமும் சொல்வோம். பூமியில் அமைதி நிலவட்டும்!

--------------------------------------------------
காட்சி 5: 40-ஆம் நாளில் எருசலேம் கோயிலில்
--------------------------------------------------
(கோயில் பகுதி. வயதான சிமியோன் காத்திருக்கிறார். யோசேப்பும் மரியாளும் குழந்தையைக் கையில் ஏந்தி வருகிறார்கள்.)

கதைசொல்லி: எட்டாம் நாளில் விருத்ததேசனம் செய்து, இயேசு என்று பெயரிட்டனர். சடங்குகளின்படி நாற்பதாவது நாளில், யோசேப்பும் மரியாளும் குழந்தை இயேசுவை எருசலேம் கோயிலுக்குக் கொண்டு சென்றனர். அங்கே கடவுளின் வாக்குறுதிக்காகக் காத்திருந்த சிமியோன் குழந்தையைக் காண்கிறார்.

(சிமியோன் குழந்தையைக் கையில் வாங்கி, கண்கள் கலங்கிப் பிரார்த்திக்கிறார்.)

சிமியோன்: இறைவனே, உம்முடைய சொல்லின்படியே உமது அடியேனை இப்போது அமைதியுடன் செல்லவிடுகிறீர். ஏனெனில், எல்லா மக்களுக்கும் ஒளி காட்டும் சுடராகவும், உம் மக்களாகிய இஸ்ரவேலுக்குப் பெருமையாகவும் நீர் ஆயத்தப்படுத்திய மீட்பை என் கண்கள் கண்டன.

மரியாள்: (சிமியோனிடம்) ஐயா, இந்தக் குழந்தையைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

சிமியோன்: இவர் பலரின் உள்ளங்களிலுள்ள எண்ணங்கள் வெளிப்படவும், அமைதியின் பாதையைக் காட்டவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். 

(அப்போது அன்னா மகிழ்ச்சியுடன் அருகில் வந்து குழந்தையைப் பார்த்துக் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார்.)

அன்னா: (கைகூப்பி மகிழ்ச்சியுடன்) கடவுளுக்கு நன்றி! என் முதுமையிலும் இந்த மீட்பரைக் காணும் பேறு பெற்றேன். எருசலேமின் விடுதலைக்காகக் காத்திருக்கும் அனைவருக்கும் இந்தக் குழந்தையைப் பற்றிய நற்செய்தியை நான் அறிவிப்பேன்!

----------------------------------------------------
காட்சி 6: ஏரோது அரண்மனை நிகழ்வு
--------------------------------------------------
(ஏரோது அரசன் தன் அரியணையில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். அருகில் அரசவை அறிஞர்கள் / மறைநூல் வல்லுநர்கள் நிற்கின்றனர். கிழக்கிலிருந்து வந்த மூன்று ஞானிகள் அரசவையில் நுழைந்து அரசரை வணங்குகின்றனர்.)

கதைசொல்லி: கிழக்கிலிருந்து வந்த ஞானிகள், வானத்தில் கண்ட அதிசய நட்சத்திரத்தின் வழிகாட்டுதலால் யூதர்களின் புதிய அரசரைத் தேடி எருசலேம் நகருக்கு வந்தனர். அவர்கள் நேராக ஏரோது அரசனின் அரண்மனைக்குச் சென்று விசாரித்தனர்.

ஞானி 1: (பணிவுடன் வணங்கி) அரசரே, வாழ்க! யூதர்களுக்கு அரசராகப் பிறந்தவர் எங்கே இருக்கிறார்? 

ஞானி 2: கிழக்கிலே நாங்கள் அவருடைய நட்சத்திரத்தைக் கண்டோம்; அவருக்கு எங்கள் வணக்கத்தைச் செலுத்தவே வெகுதூரத்திலிருந்து வந்திருக்கிறோம்.

ஏரோது அரசன்: (அதிர்ச்சியும் கலக்கமும் அடைந்து) என்ன? யூதர்களுக்குப் புதிய அரசர் பிறந்திருக்கிறாரா? நான் ஆட்சியில் இருக்கும்போதே இன்னொரு அரசரா?

(ஏரோது தன் அருகிலிருக்கும் மறைநூல் அறிஞர்களை நோக்கித் திரும்புகிறார்.)

ஏரோது அரசன்: (பதற்றத்துடன்) அறிஞர்களே! இவர்கள் சொல்வது உண்மையா? மீட்பராகிய கிறிஸ்து எங்கே பிறப்பார் என்று நம் புனித நூல்கள் கூறுகின்றன? உடனே ஆராய்ந்து சொல்லுங்கள்!

மறைநூல் அறிஞர் 1: (சுருளைப் பிரித்துப் பார்த்து) அரசரே, யூதேயாவிலுள்ள பெத்லகேம் ஊரில்தான் அவர் பிறப்பார் என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார்.

மறைநூல் அறிஞர் 2: "யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சியாளர்களில் நீ சிறியதல்ல; ஏனெனில் என் மக்களாகிய இஸ்ரவேலை வழிநடத்தும் தலைவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்" என்று கூறப்பட்டுள்ளது.

(ஏரோது மனதிற்குள் சதித்திட்டம் தீட்டியபடி, முகத்தில் போலியான புன்னகையை வரவழைத்து ஞானிகளை அருகில் அழைக்கிறார்.)

ஏரோது அரசன்: ஞானிகளே, அந்த நட்சத்திரம் எப்போது தோன்றியது?

ஞானி 3: சில காலத்திற்கு முன்பு எங்கள் நாட்டில் அந்தப் பிரகாசமான நட்சத்திரம் தோன்றியது, அரசரே.

ஏரோது அரசன்: (நயவஞ்சகமான குரலில்) அப்படியா! மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் உடனே பெத்லகேமுக்குச் சென்று அந்தக் குழந்தையைக் கவனமாகத் தேடுங்கள். அவரைக் கண்டவுடன் தவறாமல் எனக்கு வந்து செய்தி சொல்லுங்கள்; நானும் வந்து அந்தப் புதிய அரசரை வணங்குவேன்.

ஞானி 1: அப்படியே ஆகட்டும், அரசரே! நாங்கள் விடைபெறுகிறோம்.

(ஞானிகள் அரசரை வணங்கிவிட்டு மேடையிலிருந்து வெளியேறுகின்றனர். அவர்கள் சென்றதும் ஏரோதின் முகம் கடுமையாக மாறுகிறது.)

ஏரோது அரசன்: (கோபத்துடன் அரியணையிலிருந்து எழுந்து) என் அரியணையைப் பறிக்க எந்தப் புதிய அரசனையும் நான் விடமாட்டேன்! ஞானிகள் திரும்பி வரட்டும்; அந்தக் குழந்தை இருக்கும் இடத்தை அறிந்ததும், என் ஆட்சிக்கு ஆபத்து வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும்!

--------------------------------------------------
காட்சி 7: ஞானிகள் வருகை 
--------------------------------------------------
(மூன்று ஞானிகள் பொன், தூபவர்க்கம், வெள்ளைப்போளம் ஆகியவற்றைக் கையில் ஏந்தியபடி நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்து வருகின்றனர்.)

கதைசொல்லி: கிழக்கிலிருந்து வந்த ஞானிகள், வானத்தில் கண்ட நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்து வந்து, பாலன் இயேசுவைக் கண்டு வணங்கித் தங்கள் காணிக்கைகளைச் செலுத்துகின்றனர்.

ஞானி 1: நாங்கள் கிழக்கில் அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரை வணங்க வந்தோம்.

ஞானி 2: (பொன்னைக் கொடுத்து) இவர் அரசராகப் பிறந்தவர்; பொன்னைக் காணிக்கையாகத் தருகிறோம்.

ஞானி 3: (தூபவர்க்கமும் வெள்ளைப்போளமும் கொடுத்து) இவர் இறைவனுக்கும் மனிதகுலத்திற்கும் உரியவர்; எங்கள் உள்ளங்களையும் காணிக்கையாகத் தருகிறோம்.

(அனைவரும் பாலன் இயேசுவின் அருகில் நின்று கைகூப்பி வணங்குகின்றனர். பின்னணி இசை உயர்கிறது.)

கதைசொல்லி: மரியாளுக்கும் யோசேப்புக்கும் கிடைத்த அழைப்பு, எளிய மேய்ப்பர்களின் மகிழ்ச்சி, சிமியோனின் சாட்சி, ஞானிகளின் வணக்கம்—இவை அனைத்தும் கிறிஸ்துமஸின் உண்மையான பொருளைச் சொல்கின்றன. அதுவே அன்பும், எளிமையும், அமைதியும். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்!

(அனைவரும் மேடையின் முன்புறம் வந்து வணங்கி நிற்கின்றனர். நாடகம் நிறைவடைகிறது.)


Post a Comment

0 Comments