மோட்சப் பயணம்
கிறிஸ்தியான் அலங்கார மாளிகையை அடைதல் (தொடர்ச்சி)
"அதுபோகட்டும், நான் இந்த மாளிகையில் இருக்கும் கன்னிப் பெண்களில் ஒருத்தியைக் கூப்பிடுகிறேன். அவள் வந்து உன்னிடம் பேசுவாள். உன் பேச்சு உண்மையெனத் தெரிந்தால் அவள் மற்றப் பெண்களுக்கு உன்னைப் பற்றிப் பரிந்துபேசி, நீ தங்க இடம் கொடுப்பாள்" என்று கூறிய காவலாளி ஒரு மணியை அடித்தான். அப்போது விவேகம் என்ற அழகிய பெண்மணி கதவைத் திறந்து, "என்ன காரியம்?" என்று கேட்டாள்.
இந்த எளியவனின் அழிநரகத்திலிருந்து புறப்பட்டு, சீயோன் மலைக்குச் செல்கிறானாம்; களைத்துப் போயிருக்கிறான். அதுவுமில்லாமல் நேரமும் இருட்டிப் போய்விட்டது. அதனால் இங்கு தங்கிச் செல்லலாமா என்று என்னிடம் கேட்டான். இந்த அரண்மனை சட்டப்படி உன்னை அழைப்பேன். நீ வந்து நல்லது என்று கண்டால் அதன்படி செய்வாய் என்று கூறினேன்" என்றான் அந்தக் காவலாளி. விவேகம் கிறிஸ்தியானைப் பார்த்து, நீ எங்கேயிருந்து வருகிறாய், எங்கே போகிறாய்? என்று கேட்டாள். காவலாளியிடம் சொன்ன பதிலையே அவளிடமும் கூறினான் கிறிஸ்தியான்.
"நீ வழியில் என்னென்ன கண்டாய்? ஏதேனும் துன்பங்களை அனுபவித்தாயா?" என்று விவேகம் கேட்டவுடன் கிறிஸ்தியான் அதுவரை நடந்தவற்றை விவரித்தான். கடைசியாக அவள் உன் பெயர் என்ன? என்று கேட்டாள். என் பெயர் கிறிஸ்தியான், அம்மா. இரவு இங்கே தங்கிச் செல்ல விரும்புகிறேன். சீயோனுக்குச் செல்லும் பயணிகள் ஓய்வெடுக்கவே இந்த அரண்மனை கட்டப்பட்டுள்ளதென்று கேள்விப்பட்டேன்" என்று கூறும்போது அவன் கண்கள் கலங்கின. சரி இங்கேயே இரும். நான் என் தோழிகளை அழைத்து வருகிறேன்" என்று கூறிய விவேகம் உள்ளறையினுள் சென்று "முன்யோசனை, பக்தி, கருணை" என்று அழைத்தாள். அவர்கள் மூவரும் வெளியே வந்து, கிறிஸ்தியானைக் கண்டு மகிழ்ச்சியடைந்த அவர்கள் அவனை உள்ளே அழைத்துச் சென்றார்கள்.
0 Comments