தலைப்பு
அன்பின் இல்லம் — தனிமைப்படுத்துதலா? நட்புறவா?
நடுவர்:
அனைவருக்கும் வணக்கம்! நமது தேசத்தின் 80-வது சுதந்திர தின விழாவில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி.
நாம் அனைவரும் இங்கு வருவதற்கு முன் ஒருவரை ஒருவர் அறியாதவர்கள். எங்கோ இருந்த நம்மை இறைவன், Rev. வில்லியம் கிளார்க் அவர்கள் உருவாக்கிய இந்த ‘அன்பின் இல்லத்தில்’ ஒன்றாகக் கொண்டுவந்து சேர்த்துள்ளார். இங்கு நாம் வாழும் வாழ்க்கை எப்படிப்பட்டது? அதுதான் இன்றைய கேள்வி!
'அன்பின் இல்லம் — தனிமைப்படுத்துதலா? நட்புறவா?'
முதலில், "இது தனிமைப்படுத்துதல்தான்!" என்று தீப்பொறி பறக்கப் பேச வருகிறார்கள் அண்ணன் சாலமோனும், தம்பி ஜேக்கப்பும்.
அடுத்து, "இல்லவே இல்லை, இது மாபெரும் நட்புறவு!" என்று பாசமழை பொழிய வருகிறார்கள் அண்ணன் தேவராஜும், தம்பி செல்வ முருகனும்.
முதலில்... சாலமோன் அண்ணே, உங்க அனல் பறக்கும் உரையை ஆரம்பிங்க!
சாலமோன்:
அவையோருக்கும் நடுவர் அவர்களுக்கும் வணக்கம்!
நடுவர் அவர்களே... இந்த 'அன்பின் இல்லம்' என்பது வெளியில பாக்குறப்போ அழகா இருக்கும், ஆனா உள்ளே கதவைச் சாத்தி வச்சிருக்க ஒரு அழகான சிறைச்சாலை! இங்கே தனிமை எவ்வளவு கொடூரமானது தெரியுமா?
போன வாரம் காப்பகத்து மூலையில ஒருத்தர் தனியா உட்கார்ந்து அழுதுகிட்டு இருந்தார். "ஏன் ஐயா அழறீங்க?"னு கேட்டேன்.
"என் வீட்டுச் சமையலறை வாசனையும், என் பேரக் குழந்தையோட குரலும் கேக்குதுப்பா. இந்த நாலு சுவருக்குள்ள அடைஞ்சு கிடக்க முடியல... வீட்டை நினைச்சா நெஞ்சே வெடிச்சிடும் போல இருக்கு"னு என் கையைப் பிடிச்சு அழுதாரு.
நடுவர் அவர்களே! சுதந்திரமாகச் சுற்ற வேண்டிய எங்களை நாலு சுவருக்குள் அடைப்பது நியாயமில்லை! சொந்த பந்தங்களை ஏங்கவைத்து அழவைக்கும் இந்த 'அன்பின் இல்லம்' கண்டிப்பாய் ஒரு தனிமைச் சிறைதான். எனவே, 'இது தனிமைப்படுத்துதலே' என உண்மையான தீர்ப்பை வழங்குமாறு கேட்டு விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!
நடுவர்:
ஆஹா... சொந்த வீட்டின் வாசனைக்காக ஏங்கும் அந்த உணர்வை சாலமோன் ரொம்ப அழகாப் பதிவு பண்ணிட்டாரு. இதுக்கு பதில் சொல்ல வர்றாரு நம்ம தேவராஜ்! பேசுங்க தேவராஜ்...
தேவராஜ்:
அனைவருக்கும் வணக்கம்!
நம்ம சாலமோன் அண்ணன் சொல்றதுல எனக்குக் கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை நடுவர் அவர்களே.
நாம தெருவுலயும் வீட்டுலயும் தனியா இருந்தப்போ, நம்மகிட்ட பேசக்கூட மத்தவங்க பயந்தாங்க. ஆனா, இந்த 'அன்பின் இல்லத்துக்கு' வந்த பிறகுதான் நமக்கு உண்மையான நண்பர்களே கிடைச்சாங்க! இங்க இருக்குற பணியாளர்கள் கூட நம்மள சொந்தக் குடும்பம் மாதிரி பார்த்துக்கிறாங்க. இது தனிமை இல்லை... நம்ம மாதிரி ஜீவன்கள் ஒன்று சேர்ந்த மாபெரும் நட்புறவு!
அதுமட்டுமா நடுவர் அவர்களே? போன வாரம் ஞாயிற்றுக்கிழமை மதியம் இங்க சுடச்சுடச் சாப்பாடு போட்டாங்க. ஒரு அண்ணனுக்கு உடம்பு சரியில்லை, தட்ட தூக்க முடியாது. உடனே பக்கத்துல இருந்த தம்பி, சாப்பாடு வாங்கி கொடுத்து, காரசாரமான குழம்பை ஊத்தி, அவர் வாயில ஒவ்வொரு உருண்டையா ஊட்டிவிட்டான்! அந்த சாப்பாட்டோட ருசி வயித்தை மட்டும் நிரப்பல நடுவர் அவர்களே, நம்ம மனசையும் சேர்த்து நிரப்புச்சு! சொந்தக் கூடப் பொறந்தவன் கூட இப்படி ஊட்டிவிடுவானா? இந்த ருசியான அன்பும் நட்புறவும் வெளியில எங்கயாவது கிடைக்குமா?
காயப்பட்ட மனங்களுக்கு மருந்தாக இருக்கும் இந்த இல்லம், 'உண்மையான நட்புறவின் மாளிகையே' என்று உங்கள் நாவால் வரலாற்றுத் தீர்ப்பளிக்க வேண்டும் என வேண்டி விரும்பி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!
நடுவர்:
அடடா... சுடச்சுடச் சாப்பாட்டுல அன்பையும் பிசைஞ்சு ஊட்டிவிட்ட அந்த கதையைச் சொல்லி, பசியையும் தூண்டி பாசத்தையும் உணர வச்சுட்டாரு தேவராஜ்! அடுத்து வர்றாரு தம்பி ஜேக்கப். கொடுங்க உங்க பதிலை!
ஜேக்கப்:
அனைவருக்கும் வணக்கம்!
நடுவர் அவர்களே... தேவராஜ் ஏதோ கற்பனைக் கதை விடுறாரு! இங்க என்ன நட்புறவு வேண்டிக்கிடக்கு? காலையில 6 மணிக்கு எழுப்பி குளிக்க வைக்கிறாங்க... அப்புறம் டீ தர்றாங்க... ஏதோ ரொட்டீனா போகுது.
போன வாரம் நான் செவ்வாய் கிரகத்துக்கு ஒரு போன் போடலாம்னு ஆசைப்பட்டேன். "எனக்கு ஒரு லைன் எடுத்துக் கொடுங்கடா"னு கேட்டா... இந்த டாக்டரும் வார்டனும் என்ன பண்றாங்க தெரியுமா? எனக்கு ஒரு பெரிய 'சிவப்பு மாத்திரையைக்' கொடுத்து தூங்க வச்சிடுறாங்க! இது தனிமைப்படுத்துதல் இல்லாம வேற என்ன?
இன்னொரு கதை சொல்றேன் கேளுங்க... இங்க ஒரு அம்மா தினமும் மாலையில வாசலையே பார்த்து உட்கார்ந்திருப்பாங்க. காத்துல கை அசைச்சு, "வாடா கண்ணா, ஸ்கூல் விட்டு வந்துட்டியா? தோசை சுட்டு வச்சிருக்கேன் சாப்பிடு"னு பேசுவாங்க. உண்மையிலேயே அவங்களுக்குப் பிள்ளைகளே இல்லை! தனிமை வாட்டுறதால, இல்லாத ஒரு பிம்பத்தைக் கற்பனை செஞ்சு வாழறாங்க. மனிதர்களைத் தனிமைப்படுத்தினா அவங்க கற்பனை உலகத்துக்கே போயிடுவாங்க என்பதற்கு இதுவே சாட்சி!
திறந்தவெளிச் சிறகுகளை வெட்டிவிட்டு கூண்டில் அடைப்பது அன்பாகாது நடுவர் அவர்களே! எனவே, 'அன்பின் இல்லம் என்பது உணர்வுகளை அடைத்து வைக்கும் தனிமைப்படுத்துதலே' எனத் தீர்ப்பளிக்குமாறு கேட்டு விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!
நடுவர்:
அடடே... செவ்வாய் கிரகத்துக்கு எஸ்டிடி போன் போட முடியாதது ஒரு பெரிய இழப்புதான்! இருந்தாலும், அந்தத் தாயின் கதையைச் சொல்லி மனசைப் பிழிஞ்சுட்டாரு ஜேக்கப். இவருக்குப் பதிலடி கொடுக்க வர்றார் நம்ம செல்வ முருகன்!
செல்வ முருகன்:
வணக்கம் நடுவர் அவர்களே!
ஜேக்கப் சொல்றதுல நியாயமே இல்லை! வெளியே இருந்தப்போ நம்மள யாருமே மதிக்கல... அதுதான் நிஜமான தனிமைப்படுத்துதல்! ஆனா, இந்த 'அன்பின் இல்லம்' நம்மள ஒரு முழு மனிதனா நடத்துது. இங்க சாயங்காலம் ஆனா நாம எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து பாடுறோம், ஆடுறோம், பேசுறோம்.
போன ஞாயிற்றுக்கிழமை நடந்த கிரிக்கெட் விளையாட்ட சொல்றேன் கேளுங்க! ஒருத்தர் பேட்டிங் செஞ்சப்போ பந்தைப் பார்க்காமலே பேட்டைச் சுத்தினாரு. ஆனா ஃபீல்டிங் செஞ்சவரு பந்தைப் பிடிக்காம விட்டுட்டு, "ஆஹா... என்ன ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்!"னு கைதட்டுனாரு. பேட்டிங் செஞ்சவரு முகத்துல வந்த அந்த சிரிப்பை வெளியில எங்கயாவது காசு குடுத்து வாங்க முடியுமா? நாம எல்லாரும் சேர்ந்து அவரைச் சந்தோஷப்படுத்தினோம். ஒண்ணா விளையாடி ஒருத்தரை ஒருத்தர் குஷிப்படுத்துற இந்த நட்பு வெளியில கிடைக்குமா? இதுதான் நட்புறவின் உச்சக்கட்டம் நடுவர் அவர்களே!
போன மாசம் தோட்டத்தில் நாலு பேரு சேர்ந்து பராமரிக்க முடிவு செஞ்சோம். ஒருத்தர் மண்ணைத் தோண்ட, ஒருத்தர் விதை நட, இன்னொருத்தர் தண்ணி ஊத்துனோம். செடிகள் வளர வளர எங்களோட தனிமையும் மறைஞ்சது! தினமும் ஒண்ணா சேர்ந்து வேலை பார்க்கும்போது தனிமை ஓடிப்போயிடுது... நட்புறவு மலருது நடுவர் அவர்களே!
ஆகவே அன்பின் இல்லம்னா அது உண்மையான நட்புறவின் இல்லம் தான்!' அப்படின்னு நீங்க தீர்ப்பு சொல்லி ஆகணும்னு தாழ்மையோட கேட்டுக்கிட்டு விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!
நடுவர்:
நான்கு பேரின் உணர்வுப்பூர்வமான பேச்சுக்களையும் கேட்டேன்!
சாலமோனும் ஜேக்கப்பும் இங்கிருக்கும் கட்டுப்பாடுகளையும், சொந்த வீட்டின் நினைவுகளையும் பற்றிப் பேசினீர்கள். உங்கள் ஏக்கம் எனக்குப் புரிகிறது. ஆனால், இந்த இல்லத்தின் சுவர்களுக்கு வெளியே இருக்கும் நிதர்சனமான உலகத்தை நாம் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும்!
இன்றைக்கும் நம் நாட்டில்...
எத்தனை மனிதர்கள் சொந்த வீட்டிலேயே, ஒரு 'தனி அறையில்' பூட்டப்பட்டு, வெளி உலகம் தெரியாமல் முடங்கிக் கிடக்கிறார்கள் தெரியுமா?
முகவரி தெரியாம, சுற்றிலும் யாரும் அடையாளம் தெரியாம தெருக்களில் அலைந்து திரிபவர்கள் எத்தனை பேர்?
ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல், பசியோடு போவோரிடம் கைநீட்டி அடி வாங்கி, அவமானப்பட்டு வீதியில் கிடக்கும் ஜீவன்கள் எத்தனை பேர்?
அவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது... Rev. வில்லியம் கிளார்க் அவர்களின் கரங்களால் உருவாக்கப்பட்டு, தலைசாய்க்க இடமும், தட்டில் சுடச்சுட உணவும், 'நான் இருக்கேன்' என்று தோள் கொடுக்கத் தோழமைகளும் கிடைத்திருக்கும் இந்த 'அன்பின் இல்லம்' எப்படிச் சிறைச்சாலையாகும்?
வெளியே இருக்கும் 'சாதாரண உலகத்தில்' உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பிருக்கவில்லை. ஆனால், இந்த 'அன்பின் இல்லத்தில்' தான் நீங்கள் நீங்களாக இருக்க முடிகிறது. ஒருவரின் கற்பனையையும் ஏக்கத்தையும் கூட மற்றவர் மதித்து அன்பு காட்டும் இந்த இடம் தனிமைச் சிறை அல்ல! மனிதநேயமும், தூய்மையான அன்பும் நிறைந்த உண்மையான நட்புறவின் புகலிடம்!
எனவே, 'அன்பின் இல்லம்' என்பது நட்புறவின் இல்லமே என்று தீர்ப்பளித்து நிறைவு செய்கிறேன்.
நன்றி, வணக்கம்!.
0 Comments