தீபாவளி போன்ற பண்டிகை நேரங்களில் கிறிஸ்தவர்களாகிய நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் - Bro. ஸ்டான்லி அவர்களின் செய்தி
இந்தியாவெங்கும் கோலாகோலமாய் தீபாவளி கொண்டாடப்படும் காலம் இது. கிறிஸ்தவராகிய நாம் நமது பிறந்தநாள் விழாக்கள் மற்றும் கிறிஸ்துமஸ் விருந்துகளில் இந்து நண்பர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம்.
அவர்களும் கலந்து கொண்டு நாம் கடவுளுக்கு நன்றி செலுத்திவிட்டு பரிமாறும் உணவை உண்கின்றனர்.
ஆனால் அவர்கள் நம்மை தங்கள் பண்டிகை விருந்துகளுக்கு அழைக்கும் போதும், உணவு வகைகளை தரும்போதும் நமக்கு தயக்கம் வருகிறது.
அது அவர்களை புண்படுத்துகிறது.
சிலைகளை வணங்கும் 80% இந்தியரை நண்பராக்க வேண்டிய நாம் இக்காரியத்தில் எப்படி நடந்து கொள்வது என்பதை கவனிப்போம்.
ஒன்று கொரிந்தியர் எட்டு மற்றும் பத்தாம் முழு அத்தியாயங்களில் அப்போஸ்தலன் பவுல் இதை விவாதிக்கிறான்.
அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும்
நான்கு காரியங்கள்:
1. ஒன்று, சரியாய்ச் சொன்னால் சிலையானது ஒன்றுமில்லை.
அதைத்தான் ஒன்று கொரிந்தியர் எட்டு நான்கிலே வாசித்தோம்.
அது ஏசாயா 37ஆம் அத்தியாயம் 19ஆம் வசனத்திலே சொல்லப்பட்டிருக்கிறது: அவர்களுடைய தேவர்களை நெருப்பில் போட்டுவிட்டது மெய்தான், அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலையான மரமும் கல்லும்தான்.
ஆகையால் அவைகளை நீர்த்தூழி ஆக்கினார்கள்.
எனவே சிலைகளுக்கு படைக்கப்படும் எந்த ஆகாரமும் கரைப்பட்டு போவதில்லை.
ஆயினும் ஆகாரமானது சிலைகளுக்கு படைக்கப்படும் போது அது புனிதமடைகிறது என்பது சிலை வணக்கத்தாரின் நம்பிக்கை.
ஆகவே இக்கண்ணோட்டத்தில் படைக்கப்பட்ட ஆகாரத்தை கொடுத்தால் நாம் அதை ஏற்றுக்கொள்ள முடியாததுதான்.
அதைத்தான் ஒன்று கொரிந்தியர் பத்தாம் அதிகாரம் 20ஆம் 21ம் வசனத்திலே வாசிக்கிறோம்: அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல பேய்களுக்கே பலியிடுகிறார்கள் என்று சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களுடைய ஐக்கியமாய் இருக்க எனக்கு மனதில்லை.
நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம் பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜன பந்திக்கும் பேய்களுடைய போஜன பந்திக்கும் பங்குள்ளவர்களாய் இருக்கக்கூடாதே.
ஆனால் அவர்கள் கொடுக்கிற பதார்த்தங்களை பொன்முறுவலுடன் பண்புடன் வாங்க மறுத்து விடலாம்.
ஆனால் அவர்கள் இன்னும் வற்புறுத்தினால், அதை வாங்கிக்கொண்டு வரியவர் எவருக்கேனும் கொடுத்துவிடலாம்.
2. இரண்டு, சிலை வழிபாட்டு கோவிலுக்குள் ஆகாரம் வழங்கப்பட்டால் அதை நாம் சாப்பிட முடியாது.
3. மூன்று, சிலை வணங்கியாரிடம் இல்ல விருந்துகளுக்கு நாம் அழைக்கப்பட்டால், அங்கு ஒன்றையும் விசாரிக்காமல் சாப்பிடலாம் (ஒன்று கொரிந்தியர் 10:27).
அவிசுவாசிகளில் ஒருவன் உங்களை விருந்துக்கு அழைக்கும் போது போக உங்களுக்கு மனதிருந்தால், மனசாட்சி நிமித்தம் ஒன்றையும் விசாரியாமல் உங்களுக்கு முன் வைக்கப்படுகிற எதையும் புசியுங்கள்.
4. நான்கு, கடைகளில் விற்கப்படுவதையும் ஒன்றும் நினைக்காமல் சாப்பிடலாம் (ஒன்று கொரிந்தியர் 10:25, 26).
கடையிலே விற்கப்படுகிற எதையும் வாங்கி புசியுங்கள்; மனசாட்சி நிமித்தம் நீங்கள் ஒன்றையும் விசாரிக்க வேண்டியதில்லை.
பூமியும் அது நிறைவும் கர்த்தருடையவை.
மிருகங்கள், பறவைகள், செடிகொடிகள், மரங்கள் இவை யாவும் படைப்பாளராகிய நமது கடவுளுக்கு சொந்தமானவை, நாம் அவருக்கு சொந்தமானவர்கள்.
ஆனதால் இவை யாவும் நாம் அனுபவிக்கவே.
இவையெல்லாம் இன்று வாசித்த வேதப்பகுதியில் உள்ளது போல, நாம் மனப்பாடம் பண்ணினது போல திருவசனத்தினாலும் துதி ஜெபத்தினாலும் அவை தூய்மையாக்கப்படும் (ஒன்று திமோத்தேயு 4:4, 5).
எனினும் இந்த இரண்டு அத்தியாயங்களிலும் (ஒன்று கொரிந்தியர் எட்டு மற்றும் பத்தாம் அத்தியாயங்களில், ரோமர் 14ஆம் அத்தியாயத்திலும்) கற்பிப்பது என்னவென்றால்:
இறைச்சத்தியத்தின் அறிவும், கிறிஸ்துவுக்குள் நமக்கு இருக்கும் விடுதலையும், நமது சகோதர சகோதரிகளின் பலவீன மனசாட்சியை புன்படுத்தாமலும் அவர்களுக்கு தடைக்கல்லாய் இராமலும் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது பொறுப்பு.
நமது சகோதரன் இடறி போவதற்கு நாம் காரணமாய் இருந்தால் அது பாவமாகிறது.
நமது இந்திய சகோதர சகோதரிகளை இனிப்பான இயேசுவிடம் கொண்டுவர திருமறையின் வரம்பிற்குள் நம்மால் இயன்ற அத்தனையையும் நாம் செய்ய வேண்டும்.
மதுரையைச் சேர்ந்த வே. சந்தியாகு ஐயர் அவர்கள் அழகாக பாடினார்கள்:
"இந்து தேச மதுசிரோமணிகளை விந்தையொளிக்குள் வரவழைப்போம், சுந்தர குணங்கள் அடைந்து அறிவில் உயர்ந்து நிற்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலங்கிட..."
இதுவே நம்முடைய வாஞ்சையாய் இருக்கட்டும். நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதை செய்தாலும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள்.
ஜெபம்:
எங்கள் மகா பெரிய தேவனே, உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து, அவரைப் போல எங்களை மாற்றுவதற்காக எங்களைப்போல மாம்சமும் இரத்தமும் உடையவராய் இந்த உலகத்திற்கு வந்தார்.
எவ்விதத்திலும் அவர் சகோதரராகிய எங்களுக்கு ஒப்பாக அவர் எடுத்துக்கொண்ட அந்த இன்கார்னேஷனுக்காக நாங்கள் நன்றி சொல்லுகிறோம் கர்த்தாவே.
எங்களுடைய இந்திய சகோதர சகோதரிகளுக்காக ஆண்டவரே நாங்கள் எங்களால் இயன்ற அத்தனையையும் உம்முடைய வசன வரம்பிற்குள்ளே செய்துகொண்டு, அவர்களை புண்படுத்தாமல் இருந்து கொண்டு, அதே வேளையிலே சத்தியத்திற்கும் நாங்கள் சாட்சியாக நிற்க கர்த்தர் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம்.
கர்த்தாவே நாங்கள் எவ்வளவுதான் கவனமாய் இருந்தாலும் பகையையும் விரோதத்தையும் நாங்கள் ஒட்டுமொத்தமாக அகற்றி விட முடியாது, தவிர்த்து விட முடியாது.
ஆனாலும் எங்களுடைய அறிவீனத்தினாலே, மதியீனத்தினாலே, போதுமான அளவு யோசனையோடும் புத்தியினத்தோடும் நடந்து கொள்ளாததினாலே, கர்த்தாவே நாங்கள் எந்த ஒரு சகோதரனையும் சகோதரியையும் எங்களுடைய இந்து நண்பர்களையும் மற்றவர்களையும் நாங்கள் இழந்து விடக்கூடாது.
ஆண்டவரே மிகவும் ஞானமாய் நடந்து கொள்ள உதவி செய்யும்.
"அறிவு இருமாப்பை உண்டாக்கும், அன்போ பக்தி விருத்தியை உண்டாக்கும்" என்று வாசித்தோமே, அதுவே எங்களுடைய வாழ்க்கையின் கோட்பாடாக இருக்கட்டும்.
நீர் எங்களுக்காக உம்முடைய குமாரனை தத்தம் செய்து, 33 ஆண்டுகள் அவர் எங்களோடு கூட வாழ்ந்து, பாவத்தை வெறுத்தாலும் பாவிகளை நேசித்து பாவிகளை சிநேகிதராய் இருந்தாரே, அதுவே எங்களுடைய வாழ்க்கையின் முறையாக அமையட்டும்.
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள பிதாவே, ஆமென்.
Acknowledgement
நாளொரு மேனி
0 Comments