திருநெல்வேலி திருமண்டலம் சுருக்க வரலாறு History of Tirunelveli Diocese Formation

முகவுரை:
திருநெல்வேலி' என்ற பெயர், நற்செய்தி விதைப்பதற்கு மிகவும் உகந்ததாகவும் மிஷனரிப் பணிகளுக்கு மிகவும் செவிசாய்க்கக்கூடியதாகவும் உள்ள ஒரு களமாக மிக நீண்ட காலமாக கிறித்தவ உலகம் முழுவதும் அறியப்பட்டுள்ளது. திருநெல்வேலித் திருமண்டலம் மிஷனரி சங்கங்களான SPCK, CMS, SPG ஆகியவற்றின் உழைப்பின் முதிர்ச்சியாகும்.

1. முதல் சபை அமைப்பு: தொடக்கக் காலம் (1780 / Early Roots):
திருநெல்வேலியில் நற்செய்திப் பணி விரிவடைவதற்கு SPCK (Society for Promoting Christian Knowledge) அமைப்பின் கனம். சுவார்ட்ஸ் (Schwartz) மற்றும் உபதேசிமார்கள் (சவரிமுத்து, ராயப்பன், ஞானப்பிரகாசம், சவரிராயன்) ஆகியோர் முக்கிய அடித்தளமிட்டனர்.
 
தஞ்சாவூர் கிளாரிந்தா அம்மையார் (1778 & 1785): 1778-இல் சுவார்ட்ஸ் அய்யர் திருநெல்வேலிக்கு வருகை தந்தபோது, மராத்திய பிராமணப் பெண்ணான கிளாரின்தா (Clarinda) என்பவருக்கு ஞானஸ்நானம் அளித்தார். திருநெல்வேலி திருச்சபை பதிவேட்டில் முதல் பெயராக இவருடைய பெயரே இடம்பெற்றுள்ளது.
 
கிளாரின்தா அம்மையார் தனது சொந்தச் செலவில் பாளையங்கோட்டையில் ஒரு சிறிய ஆலயத்தைக் கட்டினார். இதை 1785-இல் சுவார்ட்ஸ் அய்யர் பிரதிஷ்டை செய்து, சத்தியநாதன் என்பவரை உபதேசியாராக நியமித்தார். சத்தியநாதன் பின்னர் 1790-இல் குருவானவராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

திருநெல்வேலியின் பழமையான புரோட்டஸ்டன்ட் ஆலயம் (1750): 1658-இல் டச்சுக்காரர்கள் தூத்துக்குடியைப் போர்த்துகீசியர்களிடமிருந்து கைப்பற்றி, 1750-இல் ஒரு எளிமையான ஆலயத்தைக் கட்டினர். இதன் முகப்பில் டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் முத்திரையும் (VOC - MDCCL / 1750) பொறிக்கப்பட்டுள்ளது. இதுவே அன்றைய திருநெல்வேலி மாவட்டத்தின் (இன்றைய தூத்துக்குடி) பழமையான புரோட்டஸ்டன்ட் ஆலயமாகும். 1825-இல் இது ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, 1959-இல் "பரிசுத்த திரித்துவ ஆலயம்" (Church of Holy Trinity) எனப் பெயரிடப்பட்டது.
 
முதல் கிறிஸ்தவக் கிராமம்: முதலூர் (1799): 1799-இல் 'டேவிட்' என்பவரின் முயற்சியினாலும், பாளையங்கோட்டை கேப்டன் எவரெட் என்பவரின் நிதி உதவியினாலும் 28 கிறிஸ்தவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட முதலூர், திருநெல்வேலியின் (இன்றைய தூத்துக்குடி) முதல் கிறிஸ்தவக் குடியிருப்பு கிராமமாகும். இதன் ஆலயம் 1816-இல் செங்கற்களால் புதுப்பிக்கப்பட்டு, 1929-இல் 202 அடி உயர பிரம்மாண்ட கோபுரத்துடன் உயர்ந்து நின்றது.

முதல் நூற்றாண்டு விழா (1880): 1880 ஜனவரியில் CMS மற்றும் SPG அமைப்புகள் இணைந்து திருநெல்வேலி திருச்சபையின் முதல் நூற்றாண்டு விழாவை (First Centenary) விமரிசையாகக் கொண்டாடின.

2. சென்னை திருமண்டலத்தின் கீழ் உதவிப் பேராயர்கள் (Assistant Bishops under Madras Diocese)
1896 வரை திருநெல்வேலிப்பகுதி சென்னை பேராயரின் (Bishop of Madras) அதிகார வரம்பிற்கு உட்பட்டே செயல்பட்டு வந்தது. திருநெல்வேலியில் பெருகிவந்த திருச்சபைப் பணிகளை நிர்வகிக்க இரு உதவிப் பேராயர்கள் நியமிக்கப்பட்டனர்.
 
உதவிப் பேராயர்கள் திருநிலைப்பாடு (1877): 1877 மார்ச் 11 அன்று கொல்கத்தா தூய பவுல் கதீட்ரல் ஆலயத்தில் மாகனம் munahvar எட்வர்ட் சார்ஜென்ட் (Dr. Edward Sargent) மற்றும் மாகனம் முனைவர் இராபர்ட் கால்டுவெல் (Dr. Robert Caldwell) ஆகிய இருவர் திருநெல்வேலியின் உதவிப் பேராயர்களாகத் திருநிலைப்படுத்தப்பட்டனர்.
 
பணிப் பகிர்வு & தலைமையகம்: பேராயர் சார்ஜென்ட்: CMS சபைகளின் நிர்வாகத்தை பாளையங்கோட்டையை மையமாகக் கொண்டு வழிநடத்தினார்.
பேராயர் கால்டுவெல்: SPG சபைகளின் நிர்வாகத்தை இடையன்குடி மற்றும் தூத்துக்குடியை மையமாகக் கொண்டு வழிநடத்தினார்.

3. முதல் திருமண்டலம் உருவாக்கம் (First Diocese Formation - 1896)
1890-இல் பேராயர் சார்ஜென்ட்டும், 1891-இல் பேராயர் கால்டுவெல்லும் இயற்கை எய்தியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடமும், வளர்ந்து நின்ற திருச்சபை அமைப்பும் திருநெல்வேலிக்கெனத் தனித் திருமண்டலம் (Separate Diocese) உருவாக வேண்டியதன் அவசியத்தை உணர்த்தின. நீண்ட சட்டப் போராட்டங்கள் மற்றும் தயாரிப்புகளுக்குப் பிறகு திருநெல்வேலி தனித் திருமண்டலமாக 1896 ஆம் ஆண்டு உருவெடுத்தது.
 
முதல் பேராயர் திருநிலைப்பாடு (1896):
1896 அக்டோபர் 28 அன்று Rt.Rev. சாமுவேல் மோர்லி (Rt. Rev. Samuel Morley), சென்னை மாநகரில் திருநெல்வேலி - மதுரை திருமண்டலத்தின் முதல் பேராயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். பாளையங்கோட்டையில் பேராயர் இல்லம் (Bishopstowe) கட்டப்பட்டது.
 
சபைகள் இணைப்பு நடவடிக்கை (Diocesanisation): 1908-இல் பேராயர் வில்லியம்ஸ் தலைமையில் CMS மற்றும் SPG சபைகளின் குருமார்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாகப் பொதுவான பிரார்த்தனைப் புத்தகம் (Common Prayer Book), பொதுவான பத்திரிகை மற்றும் திருச்சபை அரசியல் சாசனம் ஆகியவை உருவாக்கப்பட்டன.
 
4. TDTA உருவாக்கம் (Tinnevely Diocesan Trust Association)
CMS மற்றும் SPG ஆகிய இரு மிஷனரி அமைப்புகளுக்கும் சொந்தமாக திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பரவியிருந்த கல்வி நிறுவனங்கள், நிலங்கள், ஆலயங்கள் மற்றும் அசையாச் சொத்துக்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்துச் சரியாகப் பராமரித்து நிர்வகிப்பதற்காக TDTA (Tinnevely Diocesan Trust Association) என்னும் அறக்கட்டளை அமைப்பு 1919 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

1924 மார்ச் 11 அன்று நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திருமண்டல மன்றத்தில் (Diocesan Council), CMS மற்றும் SPG அமைப்புகள் இணைக்கப்பட்டு திருநெல்வேலி திருமண்டலம் (Diocese of Tirunelveli) முறைப்படி உதயமானது. இதனை திருநெல்வேலி திருச்சபை என்றே கூறக்கூடும். 1925-இல் நிர்வாக வசதிக்காக வடக்கு, மத்திய மற்றும் தெற்கு என 3 சபை மன்றங்கள் (Church Councils) அமைக்கப்பட்டன.

5. தென்னிந்திய திருச்சபை உருவாக்கத்திற்குப் பின் (After CSI Formation - 1947 to present)
1947 செப்டம்பர் 27 அன்று தென்னிந்திய திருச்சபை (Church of South India - CSI) உருவானபோது, அதில் இணைந்த திருமண்டலங்களிலேயே திருநெல்வேலி திருமண்டலம் தான் மிகப்பெரிய திருமண்டலமாக (The Biggest Diocese) விளங்கியது.

1947 செப்டம்பர் 27 அன்றே மதுரை - இராமநாதபுரம் தனி திருமண்டலமாக செயல்படத் துவங்கியது. நிர்வாக வசதிக்காக, 2003 அக்டோபர் 23 அன்று தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம் தனியாக பிரிந்தது.
 
நிறைவாக....
மேற்கத்திய மிஷனரிகள் விதைத்த நற்செய்தி விதை, இன்றைக்கு ஆயிரக்கணக்கான சபைகள், புகழ்பெற்ற மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சமூக சேவை அமைப்புகளாகப் பரிணமித்து தென்னிந்தியாவிலேயே தலைசிறந்த திருமண்டலமாகத் திகழ்கிறது.

மகாகனம் கால்டுவெல் பேராயர் எழுதியது (1857): "அங்கு கண்ணும் மனமும்... இந்தியாவில் உள்ள மிகப்பெரிய, மிகவும் செழிப்பான மற்றும் மிகவும் முற்போக்கான கிறித்தவச் சமூகத்தின் காட்சியால் மகிழ்ச்சியடைகின்றன.”


Complied by
Meyego+

Post a Comment

0 Comments